அரசு மருத்துவர்கள் தொடர்ந்து 5வது நாளாக போராட்டம்

4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து 5வது நாளாக போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரவேண்டும், மேற்படிப்பு அரசு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் அரசு மருத்துவர்கள், வேலை நிறுத்தம் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 25ம் தேதி துவங்கிய போராட்டமானது 5வது நாளாக நீடித்து வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நுழைவாயில் முன்பு 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 5வது நாளான இன்று பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் என சுமார் 400க்கும் மேற்பட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு உடல்நிலை பாதிக்கப்பட்ட 11 மருத்துவர்களில், 2 பேரின் உடல்நிலை மோசமாகி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள், 5வது நாளான இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கியுள்ளனர். முன்னதாக போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலையும், நாற்காலிகளையும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் போராட்டத்தை கைவிடாத மருத்துவர்கள், மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அரசு மருத்துவர்கள் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு மட்டும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 5வது நாளாக அரசு மருத்துவர்கள் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள 9 அரசு மருத்துவமனைகள், 62 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 365 மருத்துவர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதால், பயிற்சி மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவை ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைகள் அளிப்பதற்கு தயார் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Popular posts
திருவண்ணாமலை அடுத்து நல்லாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பாஷா முன்னால் தலைவர் நிவாரணம் பொருட்கள் வழங்கினார்.
Image
கோழி இலவசம் கொரோனா அச்சம் - வாங்க ஆர்வமில்லாத பொதுமக்கள்
Image
எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை - மத்திய சுகாதாரத்துறை
Image
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - டி.சிவா தலைமையில் புதிய அணி
Image
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image