நவம்பர் 4ம் தேதி புதிய புயல் உருவாக்கம்

வங்கக் கடலில் அந்தமான் அருகே நவம்பர் 4ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, அரபிக் கடலில் மகா புயலானது இன்று அக்டோபர் 31ம் தேதி காலை 8.30 மணிக்கு உருவானது. இது தற்போது லட்சத் தீவு அருகே நிலவுகிறது.
தற்போது இது அமலித் தீவுக்கு அருகே வடகிழக்கு திசையில் சுமார் 40 கி.மீ. தொலைவில் நிலவி வருகிறது.
இதுதொடர்ந்து இன்று மதியம் அளவில் தீவிரப் புயலாக மாறி லட்சத் தீவுகளைக் கடந்து வடமேற்கு திசையில் நகரும். 
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் சுமார் 33 இடங்களில் கன மழையும், 4 இடங்களில் மிகக் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் 14 செ.மீ. மழையும், குன்னூரில் 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கனமழையைப் பொறுத்தவரை தென் தமிழக மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், வட மாவட்டங்களான ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
மீனவர்கள் மாலத் தீவு மற்றும் கேரள கடற்கரை பகுதிக்கு இன்றும் (அக்டோபர் 31), லட்சத் தீவு பகுதிகளுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் தற்போதைய நிலவரப்படி நவம்பர் 4ம் தேதி வடக்கு அந்தமான ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது வடமேற்கு திசையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
எனவே மீனவர்கள் வடக்கு அந்தமான் மற்றும் வடக்கு  மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு நவம்பர் மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 
தற்போதைய நிலவரப்படி, வடகிழக்குப் பருவ மழை இயல்பான அளவை விட தமிழகத்தில் 14 சதவீதம் அதிகமாகவும், சென்னையைப் பொறுத்தவரை 6 சதவீதம் அதிகமாகவும் மழை பெய்துள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Popular posts
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - டி.சிவா தலைமையில் புதிய அணி
Image
ஜனநாயக நாட்டில் உதவி செய்யக்கூடாது என ஆணையிடுவது சர்வாதிகாரத்தனம்: ஸ்டாலின் கண்டனம்
Image
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image
வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து பரிசோதனை
Image
எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை - மத்திய சுகாதாரத்துறை
Image